தமிழ் மொழியை காக்க தமிழ்காப்பு போராட்டம் அவசியம்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: சென்னை, அண்ணா பல்கலையில் 18வது தமிழ் இணைய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாள் நடக்கும் மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், தமிழ் மொழி பயன்பாட்டை இணையத்தில் அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மென்பொருள் துறை வல்லுநர்கள், தமிழறிஞர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர். மாநாடு துவக்க விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ெதால்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பின்னர், அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: லகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கும் நிலையில், 101 மொழிகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய உலகில் 80 சதவீதம் தகவல்  தொடர்புகள் செல்போன், இணையதளம் மூலம் நடைபெறுகிறது. இதில் 54  சதவீதம் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. தமிழ் மொழியில் தகவல் தொடர்பு 0.015  சதவீதம் மட்டுமே நடைபெறுகிறது.

உலகின் பழமையான 7 மொழிகளில்  கிரேக்கம், ஹிப்ரூ உள்ளிட்ட 5 மொழிகள் தற்ேபாது பேசப்படுவதில்லை,  அழிந்துவிட்டன. தமிழ், சீன மொழி மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளது. தமிழை  உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது நம் கடமை.  ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வார்த்தை உருவாகும்போதே, அதற்கு இணையான தமிழ் வார்த்தையை தமிழில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மொழிக்கான போருக்காக நம் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் போராடினர். இன்று மொழியை காக்க மாணவர்கள் தமிழ்காப்பு போராட்டத்தில் இறங்கி புதிய சொற்களை உருவாக்க வேண்டும்.

இணையத்தில் தமிழ் பயன்பாட்டை  அதிகரிக்க வேண்டும். புதிய கலைச் சொற்களை உருவாக்குவதற்காகவே,  sorkuvai.com (சொற்குவை) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.  எல்லா தீர்ப்புகளும் தமிழ்  மொழியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பணிகளை ₹6 கோடிக்கு மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மேற்கொள்ள  முன்வந்துள்ளது. கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள 14 ஆயிரம் பொருட்களை வைத்து, அங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்க உள்ளோம்.

6ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய தொல்பொருள்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அதுதொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.

Related Stories: