அண்ணா பல்கலை அறிவித்துள்ள புதிய தேர்வு முறையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:  செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய தேர்வு விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உயர்கல்வி துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான  செமஸ்டர் தேர்வில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, மாணவர் ஒருவர் ஒரு செமஸ்டரில் தோல்வியடைந்தால் மறு தேர்வு எழுத அவருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அவருக்கு தரப்பட்டுள்ள 3 வாய்ப்புகளிலும் தேர்ச்சியடையாவிட்டால்,  மேற்கொண்டு தேர்ச்சியடையும் வரை அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது. இந்த புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  ஜே. கே.கே.நடராஜா பொறியல் கல்லூரியை சேர்ந்த மெளலி மற்றும் பிரியதர்சினி உள்ளிட்ட 10 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், இந்த புதிய விதிமுறையால்  தங்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த புதிய நடைமுறையை 2 மற்றும் 3 ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த மனு  நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில் வக்கீல் கந்தவடிவேல் ஆஜராகி, இந்த புதிய தேர்வு நடைமுறையால் 2 மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு பழைய நடைமுறையே செயல்படுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக  உயர்கல்வி துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: