×

கீழடி ஆய்வறிக்கை வெளியிட்டதற்கு பாராட்டு,..தமிழர் நாகரிக தொன்மை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது; தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோருக்கும், இந்த ஆய்வுப் பணியில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும், முதன்முதலில் இதுகுறித்து நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்திய எழுத்தாளரும், தற்போதையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கும் திமுக சார்பில் பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த எலும்புத் துண்டுகளில் இருந்து திமிலுள்ள காளையின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது-வேளாண் தொழிலில் நாம் முதன்மைக் குடியாக இருந்ததையும்-தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குரிய தொன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.   மத்திய அரசுக்கு மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சனோவ்லி என்ற இடம் உத்தரபிரதேசத்தில் மத்திய அரசால் தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தோண்டப்பட்ட கீழடி அகழாய்வு இடமும் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். கீழடி ஆய்வுகளில் பல்வேறு அரிய-தொன்மை வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போதுள்ள தொல்லியல் துறை சென்னை வட்ட அலுவலகத்தைப் பிரித்து-தென் தமிழகத்திற்கு என்று, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும்.

இது, தென் தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதற்கும், மேலும் பல தொல்லியல் அகழ்வை முன்னெடுத்துச் செல்லவும் அடிப்படையாக அமையும். கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் நகரில் மத்திய அரசு, சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதைப்போலவே கீழடியிலும், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்து-தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்றவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும், மாநில அரசும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamils , Thesis, Praise, Tamil and MK Stalin
× RELATED துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்: அரசாணை வெளியீடு