திருவல்லிக்கேணியில் முன்விரோதத்தில் பயங்கரம்,..நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி ரவுடி கொலை

* மூளையை தனியாக தட்டில் வைத்த கொடூரம்

* 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
Advertising
Advertising

சென்னை: முன்விரோதம் காரணமாக ரவுடியை வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை அருகே உள்ள கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரி (எ) அறிவழகன் (25). ரவுடியான இவன் மீது திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், அண்ணா சதுக்கம், மெரினா காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல், திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் ஜாம்பஜார் போலீசார், கஞ்சா விற்பனை செய்த வழக்கில் அறிவழகனை கைது செய்தனர். பிறகு நிபந்தனை ஜாமீனில்  வெளிவந்து தினமும் காலை 10 மணிக்கு அறிவழகன் கடந்த ஒரு வாரமாக ஜாம்பஜார் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பிரபல ரவுடி பல்பு குமாரை கொலை செய்த வழக்கில் அறிவழகன் இரண்டாவது முக்கிய குற்றவாளி ஆவார். இதனால் பல்பு குமாரின் ஆதரவாளர்கள் அறிவழகன் மற்றும் அவனது தம்பி விஜய் (எ) சொரி விஜய்யை கொலை செய்து பழிதீர்க்க பல வகையில் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மெரினா கடற்கரை பகுதியில் வழிப்பறியில் ஈடுபடுவதில் பல்பு குமார் ஆதரவாளர்களுக்கும் அறிவழகனுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது. அறிவழகன் திருட்டு மற்றும் வழிப்பறிக்கு தனது ஆதரவாளர்களுக்கு சரியாக திட்டம் போட்டு கொடுப்பார். அதன்படி அவரது ஆதரவாளர்கள் காரியத்தை சரியாக செய்து முடிப்பார்கள்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அறிவழகன் கஞ்சா போதையில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளான்.

இவன் வீட்டில் தனியாக இருக்கும் தகவல் எதிர் கோஷ்டிக்கு தெரிந்ததும், இரவு 11.20 மணிக்கு 2 ஆட்டோக்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து அறிவழகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் அறிவழகன் அலறியபடி தப்பி ஓட முயன்றார். ஆனால், கும்பல் அறிவழகனை வெளியே விடாமல் அறையிலேயே கொடூரமாக வெட்டி சாய்த்தது. அப்போதும் ஆத்திரம் தீராத அவர்கள் அறிவழகன் தலையை வெட்டி மூளையை மட்டும் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துவிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கும் வகையில் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீ சார் கெனால் தெருவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பல்பு குமார் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் கொலை நடந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணின் ஜாக்கெட்டை கிழித்ததால் கொலையா?

கஞ்சா போதையில் ரவுடி அறிவழகன் 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளான். அப்போது அந்த பெண்ணை அடித்து பொதுமக்கள் முன்னிலையில் அவரது ஜாக்கெட்டை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் மகன்கள் வினோத் மற்றும் பாலாஜி ஆகிய 2 பேர் நண்பர்களுடன் சேர்ந்து தாயை மானபங்கப்படுத்திய ரவுடி அறிவழகனை கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். அறிவழகன் கொலை செய்யப்பட்ட பிறகு இரண்டு வாலிபர்களும் மாயமாகி உள்ளனர். இதனால் அவர்கள் தான் கொலை செய்து இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். மேலும், இருவரின் செல்போன் சிக்னல் மூலம் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலைக்கு தனிப்படை விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: