×

கண்டலேறு அணை தண்ணீர் தமிழகத்துக்கு 24ம்தேதி திறப்பு

சென்னை: கண்டலேறு அணையிலிருந்து வரும் 24ம்தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒரு வாரத்தில் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய 4 ஏரிகளையும் சேர்த்து கடந்த 18ம்தேதி வரை வெறும் மொத்தம் 15 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையில் கனிசமாக அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 4 ஏரிகளையும் சேர்த்து நேற்றைய நிலவரப்படி 208 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஆந்திர அரசு அளித்த உறுதியின் படி கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தவணை காலமான ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். அந்த தண்ணீரை கேட்டு ஆந்திர அரசிடம் தமிழக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

8 டிஎம்சி அளவுக்கு கண்டலேறு அணையில் தண்ணீர் இருப்பு வந்தால் மட்டுமே தண்ணீரை திறக்க முடியும் என்று ஆந்திர அரசு தெரிவித்திருந்தது. கண்டலேறு அணையின் நீர்மட்டம் 8.61 டிஎம்சியாக உயர்ந்தது. இதையடுத்து ஆந்திர முதல்வர் அளித்த உறுதியின் படி தமிழகத்துக்கான தண்ணீரை தர ஆந்திர அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, வரும் 24ம்தேதி காலை தமிழகத்துக்கான தண்ணீரை கிருஷ்ணா கால்வாய் வழியாக திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அனில் குமார் திறந்து வைக்கிறார். இதற்காக தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் ஜார்ஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆந்திரா செல்கின்றனர். இந்த தண்ணீர் அடுத்த ஒரு வாரத்துக்குள் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து பூண்டி ஏரியை இந்த தண்ணீர் வந்தடையும்.  ஏற்கனவே நேற்று முன்தினம் பெய்த மழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 208 மில்லியன் கனஅடி வரை உயர்ந்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கும் வரும் பட்சத்தில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கனிசமான அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு ஓரிரு வாரத்தில் இருந்து சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வாய்ப்பிருப்பதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kandaleratu Dam ,24th Kandaleratu Dam , Kandaleratu Dam, Water, Tamil Nadu
× RELATED கண்டலேறு அணையில் இருந்து...