3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

சென்னை: வெப்ப சலனம் நீடிப்பதை அடுத்தும், காற்றழுத்தம் காரணமாகவும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் நீடித்து வருவதால் ஓரிரு இடங்களில் மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதாலும் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளதுடன் பரவலாகவும் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 70 மிமீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் 60மிமீ, திருமயம், கமுதி, வல்லம், அரியலூர் 50 மிமீ, சோழவரம், செங்குன்றம் 30 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் வெப்ப சலனம் நீடித்து வருவதாலும், வங்கக் கடலில் காற்றழுத்தம் நீடிப்பதாலும் 3 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories: