×

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா தரும் அரசாணை தற்போது செயல்படுத்தப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

* கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாணை உள்ளது

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் வகையிலான அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.  அரசு புறம்போக்கு மற்றும் கோயில்  நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தால் பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அரசாணையை ரத்து செய்யுமாறு உத்தரவிடக்கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த அரசாணை கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நிலங்களை கையகப்படுத்த நிலம் கையகப்படுத்தும்  சட்டம் இருக்கும் போது, இந்த உத்தரவு ஏன் கொண்டு வரப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உள்ளது. ஆனால் இந்த அரசாணை கோயில் சொத்துகளை விற்பனை செய்ய அவர்களை நிர்பந்திக்கும் வகையில் உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதுவரை இந்த அரசாணையின் படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று உறுதியளித்தார்.
 இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : government ,temple lands ,High Court ,Govt ,Tamil Nadu , Temple Lands, High Court, Government of Tamil Nadu
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...