தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் விசாரணையை முடிக்க சிபிஐ தரப்பில் மேலும் 2 மாத கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்தாண்டு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு காரணமான தமிழக உள்துறை செயலர், தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். பலியானவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். நீதிபதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த மனு கடந்த ஜூன் 27ல் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விரைவாக வழக்கு விசாரணையை முடித்து, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ மூத்த வக்கீல் நாகேந்திரன் ஆஜராகி, சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார். பின்னர் அவர், ‘‘எங்கள் தரப்பு விசாரணை கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. விரைவாக விசாரணை நடந்து வருகிறது. எங்கள் தரப்பு விசாரணையை முடிக்க மேலும் 2 மாத கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: