தொடர்ந்து 14வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 14வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 13 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும், தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது.

Advertising
Advertising

நேற்று முன்தினம் 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே நிலையில் நீடித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட, திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், நீர்மட்டம் சரியாமல் தொடர்ந்து 14வது நாளாக 120 அடியில் நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: