சேலம் கோட்ட அலுவலகத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு 5 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம்: சேலம் உள்பட 5 ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக, கோட்ட அலுவலகத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ரயில் நிலையங்களில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் ஜங்ஷனில் அமைந்துள்ளது. நேற்று மாலை, ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில், அனுப்புனர் மணிவேல் என பெயரிட்டு, முகவரி தர இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, ‘நான் ஏழ்மையான நிலையில் உள்ளேன். மத்திய அரசு எனக்கு உதவ வேண்டும். குறிப்பாக, ரயில்வே துறையில் எனக்கு வேலை வழங்கவேண்டும். இதனை நிறைவேற்றாவிட்டால், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே அதிகாரிகள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ரயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் சேலம் மாநகர போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சோதனையிட ஆரம்பித்தனர். மேலும், மோப்ப நாய்கள் துணையுடன் அங்குலம், அங்குலமாக சோதனையிடப்பட்டது. சுமார் 2 மணி நேரமாக நடந்த சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வந்த கடிதம் புரளி என்பது தெரியவந்தது.

Related Stories: