வேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகை: விவசாயி தீக்குளிப்பு மிரட்டல்

அணைக்கட்டு: வேலூர் அருகே ரிங்ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தவிர்க்கவும், வேலூரை சுற்றி ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து ஆரணி, திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை, நெல்வாய், ஆவாரம்பாளையம், மலைக்கோடி வழியாக செல்லும் வகையில் ரிங்ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆவாரம்பாளையம் பகுதியில் ரிங்ரோடு அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய  வேலூர் தாலுகா மண்டல துணை தாசில்தார் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் நேற்று வந்தனர். அப்போது, விவசாய நிலத்தில் இறங்கி அளவீடு செய்ய தொடங்கினர்.

Advertising
Advertising

உடனே விவசாயிகள், நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால், அதிகாரிகள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். பின்னர், தகவலின்பேரில் அரியூர் போலீசார் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  போலீசாரிடம், சாலை அமைக்க எங்களின் வாழ்வாதாரமான நிலத்தை அழிக்கிறீர்களே, நாங்கள் என்ன செய்வது? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இவர்களில் ஒரு விவசாயி, எனது நிலத்தை அளந்தால் தீக்குளிப்பேன் என்றார். அப்போது அதிகாரிகள், உயரதிகாரிகளின் உத்தரவின்படி அளக்க வந்துள்ளோம். நீங்கள் டிஆர்ஓவை சந்தித்து முறையிடுங்கள்’ என தெரிவித்தனர். இதனை ஏற்காத பொதுமக்கள், ‘எங்கள் இடத்தை அரசு எடுக்க, நாங்கள் எதற்காக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்’ என்றனர். இதுபோன்று சுமார் 2 மணிநேரம் அதிகாரி, போலீசாரிடம் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதன்பின், விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: