கீழடியில் நடந்த முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடியில் பழங்கால தமிழர்கள் நாகரிகத்தை வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தெரியவந்துள்ள முடிவுகளை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் சென்னையில் வெளியிட்டுள்ளார். அந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள திமிலுள்ள காளையின் எலும்புகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொருட்களில் 6 பொருட்கள் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, கரிம ஆய்வு செய்யப்பட்டதில், அவை கி.மு. 6ம் நூற்றாண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Advertising
Advertising

கீழடியில் 2015 முதல் 2017 வரை நடத்தப்பட்ட முதல் 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதில், 5,300க்கும் கூடுதலான பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பொருட்கள் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  அவை 2,218 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆய்வு குறித்த அறிக்கை இன்று வரை வெளியிடப்படாததால், தமிழர்கள் நாகரிகம் குறித்த உலகமே வியக்கக்கூடிய வகையிலான பல உண்மைகள் மக்களை சென்றடையாமல் உள்ளன. கீழடியில் இப்போது நடந்து வரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் இரட்டை கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசிடம் வலியுறுத்தி கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகளையும், ஆதிச்சநல்லூரில் 15 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டு இன்னும் வெளியிடப்படாமல் உள்ள ஆய்வுகளின் முடிவுகளையும் வெளியிடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: