நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் எதிரொலி,..மருத்துவ மாணவர் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில்  சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா சேர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றாரா அல்லது புகைப்படத்தில் இருக்கும் நபர் கலந்தாய்வில் பங்கேற்றாரா என்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவக்கல்லூரிகள் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதால் முதலாமாண்டு மருத்துவ மாணவர் புகைப்படம், ஆவணங்களை மறுஆய்வு செய்ய பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

முதல்கட்டமாக அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரம் இடங்களை தேர்வு செய்த மாணவர்களின் ஆவணங்களை மறுஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் போல், உருவ ஒற்றுமை இல்லாத மாணவர்கள் யாரேனும் இருந்தால், அந்த மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டால் அவர்கள் மருத்துவம் படிக்க தடை விதிக்கப்படும். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த மாணவர்கள் நாடு முழுவதும் மருத்துவம்  படிக்க இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதிக்கும்.

ஐகோர்ட் கிளையில் மாணவன் முன் ஜாமீன் மனு

இதற்கிைடையே, மாணவர் உதித் சூர்யா, முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். அதில், ‘நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன். உடல்நலக்குறைவால்  படிப்பை தொடர முடியவில்லை. இதனால் கல்லூரியில் இருந்து விலகி கொள்வதாக செப்.12ல் கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தேன். பிறகு கல்லூரிக்கு செல்லவில்லை. தற்போது, நான் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தவறானது. இதற்காக கண்டமனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கில்  எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: