மீனவ கிராமங்களில் புயல் காப்பகம் அமைக்க வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மீனவ கிராமமான மோர்பண்ணையில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சென்னை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. கடலோர மீனவ கிராமங்களில் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். குறிப்பாக, மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, புதுப்பட்டினம், காராங்காடு, லங்கியாடி, சோழியக்குடி, தொண்டி, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், ஓலைக்குடா, தண்ணீரூத்து, காரையூர் போன்ற கடற்கரையோர மீனவ கிராமங்கள் இயற்கை பேரிடர் காலங்களில் கடும் பாதிப்பை சந்திக்கின்றன.

கஜா புயல், ஓகி மற்றும் வர்தா புயல் வீசிய காலங்களில் இப்பகுதியினர் பெரும் சேதத்தை சந்தித்தனர். கடலோர கிராமங்களான இங்கு எந்தவித முன்னெச்சரிக்கை தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் எதுவும் அரசால் செய்து தரப்படவில்லை. மோர்ப்பண்ணை கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புயல் காப்பக கட்டிடம் முழுமையாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.எனவே, கடற்கரையோர கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூண்டில் பாலம் அல்லது கடற்கரையை ஒட்டி சுற்றுச்சுவர் எழுப்பி தரவும், மோர்ப்பண்ணையில் புதிதாக புயல் காப்பக கட்டிடமும், பல்நோக்கு சேவை மைய கட்டிடம் கட்டவும், தேவையான இடங்களில் கலங்கரை விளக்கம் அமைத்து மீனவ மக்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், மனு குறித்து மத்திய உள்துறை முதன்மை செயலர் (பேரிடர் மேலாண்மை), தேசிய பேரிடர் மேலாண் ஆணைய செயலர், தேசிய புயல் அபாய தணிப்பு திட்ட இயக்குநர், தமிழக மீன்வளத்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக். 30க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: