கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு: உலர்ந்த புளி ஜிஎஸ்டி முழுமையாக ரத்து....மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பனாஜி: வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் பொருளாதார மந்த நிலையில்  தொழிற்சாலைகள்  மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது. கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது.இதேபோல, ரியல் எஸ்டேட்  தொழிலும் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன், பல சலுகைகளை  அறிவித்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவின் பனாஜியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பலவிதமான பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு குறைந்துவிட்டதால், புகையிலை போன்ற பொருட்களின் மீதான வரிகளை உயர்த்தவும் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மேலும் பல சலுகைகளை   அளிக்கவும் மத்திய அமைச்சர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘வருமான வரிச் சட்டத்தில்  2019-20ம் நிதியாண்டு முதலே புதிய வரி விகிதம்   சேர்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22 சதவீதம் மட்டும் வருமான வரி நிர்ணயம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.   ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும் போது கிடைக்கும் லாபம் மீதான வரி மீது சர்ஜார்ஜ் ரத்து செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் அரசுக்கு ரூ.1.45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும்   அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்லைடு ஃபாஸ்டென்சர்களுக்கான மீதான ஜிஎஸ்டி வரி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது.  கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. உலர்ந்த புளி மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹொட்டல்களில் தின வாடகை ரூ.1000க்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி  கிடையாது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Related Stories: