இன்னும் 10 நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்பு

சேலம்: நாடு முழுவதும் கடந்த 5 நாளில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.1 உயர்ந்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் ₹3 வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,  அன்னிய செலவாணி, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு  முன்பு வரை, பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. ஒரு நிலையான விலையில் அது நீடித்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயலில், கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஆலை மற்றும் வயல் தீ பற்றி எரிந்தது. இதன்காரணமாக கச்சா  எண்ணெய் சப்ளையை சவூதி அரேபிய அரசு குறைத்துக் கொண்டுள்ளது. இதனால், உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்தியாவிலும் அதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல்  விலை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 15ம் தேதியில், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.50 முதல் ரூ.76 வரையிலும், டீசல் விலை ரூ.69 முதல் ரூ.70.50 வரையிலும் இருந்தது.

இது, 17ம் தேதியில் முறையே பெட்ரோல் 14 பைசா, டீசல் 16 பைசா, 18ம் தேதியில் 27, 26 பைசா, 19ம் தேதி 30, 20 பைசா என அதிகரிக்கப்பட்டது. இன்று (20ம் தேதி) பெட்ரோல் 37 பைசாவும், டீசல் 30 பைசாவும் உயர்ந்துள்ளது. இதன்மூலம் 5  நாளில் பெட்ரோல் ரூ.1.15, டீசல் 99 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.சேலத்தில் இன்று காலை பெட்ரோல் ரூ.76.35க்கும், டீசல் ரூ.70.50க்கும் விற்கப்பட்டது. இது சென்னை, கோவை, திருச்சி, வேலூர், நெல்லை என நகரங்களுக்கிடையே மாறுபட்டு  இருந்தது. இந்த விலை உயர்வு இன்னும் 10 நாட்களுக்குள் மேலும் ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: