கந்தர்வகோட்டையில் சிவன் கோயில் அருகே சுற்று சுவரின்றி கிணறு: மக்கள் அச்சம்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆபத்தான கிணறை மூட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கந்தர்வகோட்டையில் ஆபத்சகாஈஸ்வரர் உடனுறை அமராவதி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சங்கூரணி குளம் உள்ளது. இக்குளத்தின் ஓரத்தில் ஏற்கனவே பெரிய கிணறு இருந்தது. கிணற்றின் சுற்று பக்க கற்களை மர்ம நபர்கள்  பெயர்த்து எடுத்து சென்று விட்டதால் தற்போது ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது. பயன்பாடற்ற இந்த கிணறு அருகே குடியிருப்புகள் உள்ளது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் அப்பகுதியில் விளையாடுவது வழக்கம்.

மேலும் சிவன்  கோயிலுக்கு எப்போதும் பக்தர்கள் சென்று வருகின்றனர். திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சி கோயிலில் நடைபெறும். அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கிணற்று கரையில் சென்றதால் மண் சரிந்து விபத்து ஏற்பட  வாய்ப்புள்ளது. பள்ளத்தால் கோயிலுக்கு செல்லவே அச்சம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கிணற்றை மூடவேண்டும். இல்லை என்றால் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். உயிர் பலி  ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: