×

வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது: ராகுல் காந்தி டுவிட்

புதுடெல்லி: வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் பொருளாதார மந்த நிலையில்  தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது.  கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது.இதேபோல, ரியல் எஸ்டேட்  தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன், பல சலுகைகளை  அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவின் பனாஜியில் தொடங்கியது.  இக்கூட்டத்தில் பலவிதமான  பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் வகையில்  ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள், கற்கள் போன்றவைகளுக்கும் இ-வே ‘பில்’ (ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோரு மாநிலத்திற்கு 50,000 ரூபாய்க்கும்  அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச் செல்லும் போது ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 68-ன் கீழ் இ-வே ‘பில்’ பெற வேண்டும்) கொண்டு வருவது பற்றியும், இக்கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு குறைந்துவிட்டதால், புகையிலை போன்ற பொருட்களின் மீதான வரிகளை உயர்த்தவும் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மேலும் பல சலுகைகளை  அளிக்கவும் மத்திய அமைச்சர் முடிவு  செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘வருமான வரிச் சட்டத்தில்  2019-20ம் நிதியாண்டு முதலே புதிய வரி விகிதம்  சேர்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் 15  சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை குறைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது’’ என்றார். உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22 சதவீதம் மட்டும் வருமான வரி நிர்ணயம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.  ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும் போது கிடைக்கும் லாபம் மீதான வரி மீது சர்ஜார்ஜ் ரத்து செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் அரசுக்கு ரூ.1.45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும்  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை எடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.அதில் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்றும், வெளிநாட்டவர்கள் இந்தியாவில்  முதலீடு செய்ய வரி குறைப்பு நடவடிக்கை உந்துதலாக அமையும் என்றும் மோடி பாராட்டியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு பெருகவும், நிறுவன வரி குறைப்பு உதவும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொழில்  தொடங்குவதற்கு ஏற்ற நாடு என்ற சூழலை உருவாக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது அரசின் லட்சியம் என்று பிரதமர் மோடி ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன், வரி குறைப்பு  நடவடிக்கை எடுத்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.



Tags : Indian ,state ,Rahul Gandhi Dwight , Nothing, including tax cuts, can hide the worst of the Indian economy: Rahul Gandhi Dwight
× RELATED வேறு மாநிலங்களில் தமிழிசை...