திருமங்கலம் பகுதியில் மழை தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. கால்வாயை அடைத்து புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மதுரையிலிருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மார்க்கத்தில் இரண்டாவது அகல ரயில்பாதைக்கான பணி நடைபெற்று வருகிறது. திருமங்கலம்-விருதுநகர் ரயில்வே பாதையில் 30 சதவீத பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், நகரின் தென்பகுதியில் ஊருக்கு வெளியே குண்டாற்றின் கரையில் வடகரை செல்லும் ரோட்டில் புதிதாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இடத்தில் தரைப்பாலம் அமைந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த தரைப்பாலம், அருகிலுள்ள கால்வாயை அடைத்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கும் என வாகன ஓட்டிகள் ஏற்கனவே புகார் தெரிவித்து வந்தனர்.

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் வடகரை புதிய பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சைக்கிள், டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தரைப்பாலத்தை கடந்து செல்லமுடியவில்லை. பள்ளி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் தண்ணீரில் தத்தளித்தபடியே செல்கின்றன. பாண்டியன் நகர் ரயில்வேகேட் அடைத்துள்ள நிலையில் வடகரை, புதூர், கீழக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் இந்த தரைபாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். திருமங்கலம் நகரின் சுடுகாடும் தரைப்பாலத்தை தாண்டி அமைந்துள்ள நிலையில் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நகர மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என திருமங்கலம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலத்தில் லேசான மழை கூட இல்லாமல் கடுமையான வெப்பம் நிலவியது. இதனால் கண்மாய், குளங்களிலும் நீர் இல்லாமல் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது.கடந்த மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் கனமழை, மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மழை முற்றிலும் குறைந்தது. மீண்டும் தற்போது கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் அதிகபட்சமாக சிவகங்கையில் 52.6 மி.மீ. மழை பதிவானது. தேவகோட்டையில் 46.2 மி.மீ., காரைக்குடியில் 46 மி.மீ., காளையார்கோவிலில் 40.6 மி.மீ., திருப்புவனத்தில் 22.6 மி.மீ., இளையான்குடியில் 20 மி.மீ., சிங்கம்புணரியில் 19 மி.மீ., திருப்புத்தூரில் 13 செ.மீ., மானாமதுரையில் 8.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: