வெளி மாவட்டங்களில் தேர்வு மையம்: ஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் அதிர்ச்சி

திருமங்கலம்: வெளிமாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. மொத்தம் 2144 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த ஜூன் 12ம் தேதி ஆசிரியர் பயிற்சி தேர்வு வாரியம் வெளியிட்டது.  தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.  தேர்வு மையங்கள் விண்ணப்பதாரர்களின் சொந்த மாவட்டத்திலேயே அமையும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு வரும் 27, 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் தற்போது ஆன்லைனில் தேர்வுக்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையங்களை பார்த்தவுடன் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் அவர்கள் விண்ணப்பித்திருந்த சொந்த மாவட்டங்களை விடுத்து வெவ்வேறு மாவட்டங்களில் தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு ராமநாதபுரம், தேனி, விழுப்புரம், நெல்லை என தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் தேர்வு என்பதால் காலை 8 மணிக்கே தேர்வு எழுதுபவர்கள் மையத்தில் இருக்க வேண்டும். இந்தநிலையில், வெளிமாவட்டங்களில் தேர்வு மையத்தை அமைத்து ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பியுள்ளது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆன்லைன் தேர்வு என்பதால் காலை 8 மணிக்தே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். இதனால் முதல் நாளே புறப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அறை எடுத்து தங்குவது, உணவு வசதிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கூடுதல் செலவு தங்களுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தும் என முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே ஆன்லைன் தேர்வு முறைக்கு ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இது சம்மந்தமாக நீதிமன்றம் தேர்வு வாரியத்திற்கு விளக்கம் கேட்டுள்ள நிலையில், தற்போது அடுத்த குழப்பமாக சொந்த மாவட்டங்களில் மையங்கள் வழங்காமல், வெளிமாவட்டத்தில் தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் கடந்தாண்டு அமைத்தது போல் முதுநிலை ஆசிரியர் தேர்விற்கான தேர்வு மையங்கள் வெளிமாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: