×

மீண்டும் மீண்டும் தோல்வி: ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியாமல் பாகிஸ்தான் ஏமாற்றம்

ஜெனிவா: ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை  பதிவு செய்வதற்கான இறுதி அவகாசத்தை தவறவிட்டு பாகிஸ்தான் தோல்வி  அடைந்தது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன்  பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி  மேற்கொண்டது. இதற்காக காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்  எழுப்ப வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங்கிடம், பாகிஸ்தான்  வெளியுறவு அமைச்சர் மகமூத் குரேஷி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.  காஷ்மீர் விவகாரத்தில் நீதி கிடைக்க சீனா துணை நிற்கும் என குரேஷியிடம் வாங்  தெரிவித்தார். மேலும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட  வேண்டும் என அதன் தலைவரும், போலந்து ஐ.நா தூதருமான ஜோனா  ரோனெக்காவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கடிதம்  எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள்  கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று கடந்த  ஆகஸ்ட் 16-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி,16-ம் தேதி நடந்த  பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில்  சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை  நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு  ஆதரவு தெரிவித்தன. இதனால் இப்பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற  பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 42வது கூட்டம் ஜெனிவாவில் கடந்த  9-ம் தேதி தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. காஷ்மீர் பிரச்னை  குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை  அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார். இந்நிலையில், கூட்டத்தில் காஷ்மீர்  தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்ய செப்டம்பர் 19-ம் தேதி வரை  பாகிஸ்தானுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவகாசம் நேற்றுடன் (செப்.,  19) முடிவடைந்ததை அடுத்து பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய  முடியவில்லை. இதற்கு, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே  உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டுவர,  குறைந்தபட்சம் 16 நாடுகளின் ஆதரவும், அந்த தீர்மானத்தில் வெற்றி பெற 24  நாடுகளின் ஆதரவும் தேவை. ஆனால் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான 16  நாடுகளின் ஆதரவு கூட இல்லாததால் பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய  முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில், காஷ்மீர்  விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டதாகவும், அதற்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்ததாகவும்  பதிவிட்டிருந்தார். 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட கவுன்சிலில் 58  நாடுகளின் ஆதரவு இருப்பதாக கூறியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.  இந்நிலையில், 58 நாடுகளின் ஆதரவு இருப்பதாக கூறியும் தற்போது 16 நாடுகளின்  ஆதரவை கூட பெற முடியாததால் மீண்டும் பாகிஸ்தான் குறித்து இணையவாசிகள்  கேலி செய்து வருகின்றனர்.


Tags : Pakistan ,Kashmir ,UN Human Rights Council , Pakistan fails to file resolution on Kashmir at UN Human Rights Council
× RELATED சில்லி பாயின்ட்...