×

அண்ணா பல்கலை. புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு: உயர்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி மாணவர் ஒருவர் ஏதாவது ஒரு தேர்வில் தோல்வியடைந்தால் மறு தேர்வு எழுத அவருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும். கொடுக்கப்பட்ட 3 வாய்ப்புகளிலும் தேர்ச்சியடையாவிட்டால் மேற்கொண்டு தேர்ச்சி அடையும் வரை அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை ரத்து செய்யக்கோரி ராமக்கல்லை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மௌலி, பிரியதர்ஷ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அதில் அண்ணா பல்கலை கழகத்தின் புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி சதவிகிதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த புதிய விதிமுறைகளை 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேசஷாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்த வடிவேல், இந்த புதிய தேர்வு விதிமுறைகளால் 2 மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு பழைய நடைமுறையையே செயல்படுத்த வேண்டும் என வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்குக்கு தொடர்பாக உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Anna University ,Higher Education Department , Anna University, New Testament, Case, Department of Higher Education, Response, Icort Order
× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று