அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இமெல்டா புயல் கோர தாண்டவம்: மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இமெல்டா புயல் வீசி வருவதால் அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. டெக்சாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹூஸ்டன் நகரை கடந்த 3 நாட்களாக  இமெல்டா புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதோடு மட்டுமின்றி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கிய காருக்களிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களை மீட்பு குழுவினர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். தொடர் மழை காரணமாக ஹூஸ்டன் நகரில் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ரைஸ்லான் என்ற மருத்துவமனையை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அங்கிருந்து நோயாளிகள் பிற மருத்துவமனைக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஹூஸ்டன் நகரின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது குதிரையை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்நகரில் சுமார் 1 லட்சம் வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிசக்தி ஆலை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் நடைபெறும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹூஸ்டன் நகரில் புழல் தாக்கி 60க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் நடைபெறவுள்ள ஹவுடிமோடி நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் உரையாற்ற இருக்கிறார். தற்போது அந்நகரை புழல் தாக்கியுள்ளதால் நிகழ்ச்சி தடையின்றி நடைபெறுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: