13 பேரை பலிக்கொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ

மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை சிபிஐ தரப்பில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் பின்னணி

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.

அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

இந்த வழக்கில் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து, உயர்நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 16ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்திருந்தது.

சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல்

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்தும், காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் நிலை அறிக்கை சிபிஐ தரப்பில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்து முடிக்க ஒரு வார காலம் ஆகும் என்பதால் வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி 4 மாதத்தில் விசாரணையை முடிக்க கடந்த 2018ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ தரப்பில் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: