×

தலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை கடந்த 6ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் பின்னர் கடந்த 9ம் தேதி முதல் அவர் உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரித்தார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

இந்நிலையில், தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார். வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிராபகர் முறையிட்டார். தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் மீது குடியரசு தலைவர் இதுவரை முடிவெடுக்காத நிலையில், கொலீஜியம் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவர் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது, கொலீஜியத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடாமல் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், கொலீஜியத்தில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தது, நிர்வாக உத்தரவு என்பதால் உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் வழக்கறிஞர் பிரபாகர் குறிப்பிட்டார். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவானது பட்டியலிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா என அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tahilrani ,Meghalaya Madras High Court ,Chief Justice ,Supreme Court ,Dahil Ramani ,mekala , Madras High Court Chief Justice, Dahil Ramani, mekala, kolijiyam, Supreme Court, High Court
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...