பிரதமர் மோடியின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்கக் கூடாது: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கருத்து

ராஜஸ்தான்: பிரதமர் மோடியின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான  சசிதரூர் கருத்து தெரிவித்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற டாக் ஜெர்னலிசம் என்னும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிதரூர், நாட்டின் பொருளாதாரம், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை குறித்து பேசினார். அப்போது கட்சியின் தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அது தொண்டர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் எனவும் சசிதரூர் கூறினார். ஆனால் தற்போது சோனியா காந்திக்கு இடைக்கால தலைவர் எனும் கவசத்தை காங்கிரஸ் காரிய கமிட்டியினர் வழங்கியிருப்பதாகவும் சசிதரூர் தெரிவித்தார். இதேபோல பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீடுகளை திரும்ப எடுத்து கொண்டிருப்பதாகவும், நாட்டில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே  இதற்கு காரணம் எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதலால் சமூக நல்லிணக்கம் தேய்ந்து வரும் நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பவில்லை எனவும் சசிதரூர் கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து பேசிய அவர் எதற்கெடுத்தாலும் மோடியை விமர்சிக்க கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்க எது காரணம் என நாம் சிந்திக்க வேண்டும் எனவும், சுவாஜ் பாரத், உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் உண்மையிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: