நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எதிரொலி : மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி தீவிரம்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 5,500 மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார்.

ஆள்மாறாட்டம் வெளியான தகவலை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மாணவன் கல்லூரிக்கு வரவில்லை. இதற்கிடையே இந்த மோசடி பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்ட மாணவனை பிடிக்க தேனி மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க மருத்துவ கல்வி இயக்கம் உத்தரவிட்டது. அதன்படி மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆள்மாறாட்டம் செய்து தலைமறைவாகியுள்ள உதித்குமாரை கைது செய்ய தேனி போலீஸ் சென்னையில் முகாமிட்டுள்ளனர். உதித்குமார் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் போலீஸ் விசாரணை

ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் தந்தை வெங்கடேசன் பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இதனால் மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த தேனியில் இருந்து 6 பேர் கொண்ட தனிப்படையினர் நேற்று மாலை சென்னை வந்தனர். இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: