லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 4 மாதத்தில் உருவாக்கி  அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 11ம் தேதி உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ்  நியமிக்கப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறையை சார்ந்திராத ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் கோவை மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் சங்க  நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ராஜாராம், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் விதிகளுக்கு புறம்பாக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்  என்று கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட 2 பேரின் நியமனத்துக்கு மட்டுமில்லாமல் லோக்  ஆயுக்தா தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கும் சேர்த்து இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, கடந்த மே 8ம் தேதி விவசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு எந்த வித தடையும் விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: