நெல்லை, தூத்துக்குடியில் அரசு வேலை ஆசைகாட்டி ரூ.45 லட்சம் மோசடி செய்த மதுரை வாலிபர் கைது

நெல்லை: நெல்லையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியும் பலருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியும் ரூ.45 லட்சம் மோசடி செய்த மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்தவர் ஜோதிமகாலிங்கம் (45). இவரது மனைவி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வுகள் எழுதி வருகிறார். இதனையறிந்த மதுரை பாரதிநகரைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சத்தியமூர்த்தி (39) ஜோதிமகாலிங்கத்தை கடந்தாண்டு ஜனவரி மாதம் அணுகி, உங்களது மனைவிக்கு இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் அதிகாரி வேலை வாங்கித் தர முடியும். ஆனால் அதற்கு ரூ.15 லட்சம் ஆகும். முதல் தவணையாக ரூ.7 லட்சம் தர வேண்டும். பின்பு பணி நியமன ஆணை வந்த பின்பு பாக்கித் தொகையான ரூ.8 லட்சத்தை தர வேண்டும் என்றார்.

Advertising
Advertising

இதனையடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் ஜோதிமகாலிங்கம் ரூ.7 லட்சத்தை சத்தியமூர்த்தியிடம் வழங்கினார். ஆனால் 6 மாதமாகியும் அவர் பணி நியமன ஆணை பெற்றுத் தராமல் காலம் கடத்தி வந்தார். இதனையடுத்து ஜோதிமகாலிங்கம் ரூ.7 லட்சத்தை திரும்ப தருமாறு சத்தியமூர்த்தியிடம் கேட்டார். ஆனால் அவர் தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மாதம் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற தீபக் எம் டாமோர் துப்பு துலக்காத வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். குற்றப்பிரிவு துணை கமிஷனர் மகேஷ்குமார் ஆலோசனையின் பேரில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து இவ்வழக்கில் தொடர்புடைய சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. சத்தியமூர்த்தியின் தந்தை ஓய்வு பெற்ற விஏஓ ஆவார். சத்தியமூர்த்தி மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் அரசு வேலை தேடி வரும் பட்டதாரிகளின் விவரங்களை சேகரித்து அவர்களை சந்தித்து, தன்னை தாசில்தார் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி ஏராளமான பணத்தை பெற்றும், அரசு வேலைக்கான போலி பணி நியமன ஆணைகளை வழங்கியும் ரூ.45 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். மேலும் தாசில்தார், விஏஓ போன்று கையெழுத்திட்ட போலி பணி நியமன ஆவணங்களையும் அளித்து மோசடி செய்துள்ளார். 30க்கும் மேற்பட்டவர்களிடம் இவ்வாறு ஏமாற்றியுள்ளதாக விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: