புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவா: நிறுவன வரிவிகிதத்தை குறைப்பதற்கான சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியை 22 சதவீதத்துக்கு குறைக்க பரிந்துரை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். தொழில் உற்பத்தி துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வரியை 15 சதவீதமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்படும் என்றும், 2019-ம் ஆண்டு அக்டோபர் 1.ம தேதிக்கு பிறகு தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சர்சார்ஜ், செஸ் உள்ளிட்டவை சேர்த்து புதிய நிறுவனங்கள் மீதான வரி 17.01 சதவீதமாக இருக்கும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேட் வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், 2023-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 37-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவா மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனையில் வீழ்ச்சி காணப்படுகிறது. தற்போது ஆட்டோ மொபைல் துறைக்கு 28 சதவீதம் வரி விதிப்பு உள்ளது.     எனவே ஆட்டோ மொபைல் உற்பத்தியில் தேக்கம் ஏற்படாமல் தடக்க வரிசலுகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Related Stories: