சந்திரயான் 2 விண்கலத்தின் அங்கமான விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் இன்றுடன் முடிவு

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 2 விண்கலத்தின் அங்கமான விக்ரம் லேண்டரின்  14 நாள் ஆயுட் காலம் இன்றுடன் முடிகிறது. சந்திரயான் 2 என்ற விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியதில், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் விழுந்து சாய்ந்து கிடப்பது தெரிய வந்தது. விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதனுடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் இன்றளவும் பயனளிக்கவில்லை.

இனி லேண்டருடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் போது மிகுந்த வேகத்துடன் இறக்கப்பட்டதால், அது தரையில் மோதி கவிழ்ந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக செயலிழப்பு ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது. இதையடுத்து 1471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகத்துடன் தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட தவறால் அது சேதமடைந்திருக்க கூடும். விரைவில் இஸ்ரோ விக்ரம் ஏன் செயலிழந்தது? என்று விரிவான அறிக்கையை வெளியிடவுள்ளது. இதனிடையே விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை படம்  பிடித்த நாசாவின் எல்.ஆர்.பி ஆர்பிட்டர் போதிய வெளிச்சம் இல்லாததால் தெளிவாக படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா அனுப்பிய தெளிவில்லாத படங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: