×

நீக்குவது ஏன் என்பதற்கு விளக்கம் சொல்வதில்லை...ஹேமங் பதானி குற்றச்சாட்டு

சென்னை: ‘ஒரு வீரரை அணியில் இருந்து ஏன் நீக்குகிறார்கள் என்று தெரிவதில்லை. கேட்டால் விளக்கமும் சொல்வதில்லை’ என்று தேர்வு குழு மீது இந்திய அணி முன்னாள் வீரர் ஹேமங் பதானி பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் முட்டி மோதுகின்றனர். அவர்களில் இருந்து 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது எளிதான காரியம் இல்லை. யாரை தேர்வு செய்தாலும், தேர்வு செய்யாவிட்டாலும் விமர்சனத்துக்கு பஞ்சம் இருக்காது. அதனால் பிசிசிஐ நியமிக்கும் ‘தேர்வுக் குழு’வுக்கு அணியை தேர்வு செய்வதில் எப்போதும் சிரமம்தான். ஆனால், வாரியத்தின் விருப்பு/வெறுப்பு அடிப்படையில்தான் அணி முடிவாகிறது என்பது நீண்ட நாட்களாக தொடரும் குற்றச்சாட்டு. இதில் கேப்டன், பயிற்சியாளரின் அழுத்தமும் சேரும்.

தேர்வுக் குழுவும் ஒரு வீரரை ஏன் தேர்ந்தெடுத்தோம், ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்தை பெரும்பாலும் சொல்வதில்லை. அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கும் வீரர் திடீரென அணியில் இடம் பெற மாட்டார். காரணம் அவருக்கும் தெரியாது. அடுத்தவருக்கும் புரியாது. நன்றாக ஆடினாலும் அதே நிலைமைதான். அப்படியே 2 அல்லது 3முறை தேர்வு செய்யாமல் விட்டு அவர்களே ‘போதும் இந்த விளையாட்டு’ என்று விலகிய வரலாறுகள் ஏராளம்.
சமீபத்தில் அப்படிதான் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பாதி ராயுடு விலகினார். அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காயம் காரணமாக விலகிய தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், உடல்தகுதி பெற்றும் மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. சரியாக ஆடவில்லை என்று ஒருவரை நீக்குவது நியாயம். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் நீக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் பிசிசிஐ இப்போது உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கே.ஸ்ரீகாந்த், முன்னாள் வீரர் ஹேமங் பதானி இருவரும் இப்போது கிரி்க்கெட் போட்டிகளை வர்ணனை செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹேமங் பதானி, ‘அணியில் இருந்து நம்மை ஏன் நீக்குகிறார்கள். இடம் கிடைக்காததற்கு என்ன காரணம் என்று நமக்கு தெரிவதில்லை. அவர்களும் சொல்வதில்லை. அப்படி காரணங்களை சொன்னால் தானே, தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். அப்படிதான் எனக்கு திடீரென அணியில் இடம் கிடைக்கவில்லை. உடனே தேர்வுக்குழு தலைவரிடம் பேசினேன். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. அவரிடம் என்னை ஏன் நீக்கினீர்கள். சரியாக ஆடவில்லையா, பேட்டிங் சரியில்லையா, பந்துவீச்சு சரியில்லையா என காரணங்களை கேட்டேன். அவர் சொல்லவேயில்லை. வருத்தமாக இருந்தது. ஒருவருக்கு அணியில் இடம் தரவில்லை என்றால் அதற்கான காரணங்களை சொல்வதுதான் நியாயமாக இருக்கும். அதனை செய்யாமல் தேர்வுக்குழு அலட்சியம் காட்டுகின்றனர்’ என்று குற்றம் சாட்டினார்.

அப்போது பேசிய காந்த், ‘நான் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று சம்பந்தபட்ட வீரர்களுக்கு விளக்கம் சொல்லி இருக்கிறேன். அதில் சீனியர் வீரர், ஜூனியர் வீரர் என்ற வித்தியாசம் பார்த்ததில்லை. சம்பந்தப்பட்ட வீரரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பதை அவருக்கு விளக்குவதுதான் நியாமானது. அதை தேர்வுக்குழு செய்ய வேண்டும்’ என்றார். நீண்ட காலமாக அணித் தேர்வு குறித்து இருந்த இந்த குற்றசாட்டுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Hemang Badani , Hemang Badani, Indian team
× RELATED சீனா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு