×

திட்டமிட்டு செலவிடாவிட்டால் பொருளாதாரத்தை உடனே மேம்படுத்துவது சாத்தியமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுறுத்தல்

மும்பை: மத்திய அரசு பட்ஜெட் செலவினங்களை திட்டமிட்டு செலவழிக்காவிட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாத்தியம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். மும்பையில் பொருளாதாரம் தொடர்பாக நடந்த மாநாட்டில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பேசியதாவது: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பால், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது தேக்க நிலையில் உள்ள பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் திருப்பிவிடும் என்று நம்பிக்கை உள்ளது. சவூதி அரேபியாவில் நடந்த தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் இந்த சவால்களை சமாளிக்க போராடுகின்றன. இந்த மந்தநிலை நீண்ட காலம் நீடிக்காது. அரசின் நடவடிக்கையால் எந்த ஒரு பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

சர்வதேச நிலையில் இருந்து அழுத்தம் இருந்தாலும் உள்நாட்டில் பொருளாதாரம் ஓரளவு சீரான நிலையிலேயே உள்ளது. வெளிநாட்டு கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.7 சதவீதமாக உள்ளது. நமது பொருளாதாரத்தை மேம்படுத்த அடிப்படை கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். அரசு பட்ஜெட் தயாரித்து அதன் அடிப்படையில் செலவிடுகிறது. அதனால், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிய அளவிலேயே இடம் உள்ளது. எனவே, பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல பட்ஜெட் ஒதுக்கீடுகளை திட்டமிட்டு செலவிட வேண்டும். இல்லாவிட்டால் வளர்ச்சிக்கான சாத்தியம் குறைவுதான். நமது நாட்டின் பணவீக்கம் அடுத்த 12 மாதங்களுக்கு 4 சவீதம் என்ற அளவிற்கு கீழ் இருக்கும்.. வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புகள் உள்ளன என்றார்.

Tags : Governor ,Reserve Bank , RBI Governor, Federal Government Budget, Economic Growth
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி: ராணுவ...