உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4ம் தேதி வெளியிட வேண்டும் : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை :  தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால், அதன்பின்னர் வார்டு மறுவரையறை, வழக்குகள் போன்ற காரணத்தினால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தள்ளப்போனது. அதோடு,  உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில்,   உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்ததோடு,  உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக கால அட்டைவனையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகள் வரும் 30ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பட்டியலை அக்டோபர் 1ம் தேதி அச்சு பணிக்கு அளிக்க வேண்டும். அச்சடிக்கும் பணியை 3ம் தேதிக்குள் முடித்து 4ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த வாக்காளர் பட்டியலை 5ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு அளித்து இது தொடர்பான அறிக்கையை அன்றைய தினம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: