×

ஜனநெருக்கம் மிகுந்த நகரங்களின் பட்டியலில் மும்பைக்கு 2வது இடம் : 1 சதுர கி.மீ. பரப்பளவில் 26,453 பேர் வசிக்கின்றனர்

மும்பை: மும்பை மாநகராட்சியின் 2018-19ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அறிக்கையின்படி, நகரில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 26,453 பேர் வசிக்கிறார்கள். இதன்படி பார்த்தால், உலகிலேயே மக்கள் தொகை நெருக்கம் அதிகமான நகரங்களின் பட்டியலில் மும்பை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மும்பையில் 1.27 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மக்கள் நெருக்கம் நிறைந்த நகரங்களில், வங்கதேச தலைநகர் தாகாவுக்கு அடுத்தபடியாக மும்பை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. சபையின் 2018ம் ஆண்டுக்கான வாழ்விட தகவல்கள் அறிக்கை தெரிவிக்கிறது. தாகாவில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 44,500 பேர் வசிக்கின்றனர். பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது கொலம்பியா நாட்டில் உள்ள மிடிலின் நகரம் ஆகும். இங்கு சதுர கி.மீ பரப்பளவில் 19,700 பேர் வசிக்கின்றனர். மும்பை நகரம் 24 மாநகராட்சி வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பி/வடக்கு வார்டுதான் அதிக ஜனநெருக்கம் மிகுந்த பகுதி ஆகும். குறிப்பாக, மலாடை உள்ளடக்கிய இந்த வார்டில் 9,67,094 மக்கள் வசிக்கின்றனர். மிகக் குறைவான மக்கள் வசிக்கும் வார்டு ‘பி’ வார்டு ஆகும். டோங்கிரியை உள்ளடக்கிய இந்த வார்டின் மக்கள் தொகை 1,30,769.

மும்பையில் பிறப்பு விகிதம் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கு உயிருடன் பிறக்கும் குழந்தைகள்) குறைந்துவிட்டதாகவும் அந்த அறிக்கை ெதரிவிக்கிறது. கடந்த 2017ல் பிறப்பு விகிதம் 12.14 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 11.83 ஆக குறைந்து விட்டது. அதே சமயத்தில் மரணமடையும் விகிதம் அதிகரித்துள்ளது. 2017-18ம் ஆண்டில் மரண விகிதம் 24.63 ஆக இருந்தது. 2018-19ம் ஆண்டில் அது 26.33 ஆக அதிகரித்து விட்டது.

* மும்பை நகரம் 24 மாநகராட்சி வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பி/வடக்கு வார்டுதான் அதிக ஜனநெருக்கம் மிகுந்த பகுதி ஆகும்.
* கடந்த 2017ல் பிறப்பு விகிதம் 12.14 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 11.83 ஆக குறைந்து விட்டது. அதே சமயத்தில் மரணமடையும் விகிதம் அதிகரித்துள்ளது.

Tags : Mumbai ,cities ,area ,population , Mumbai is 2nd in the list , most populated cities
× RELATED பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பை மருத்துவமனையில் அனுமதி