ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு மேலும் 14 நாட்கள் ப.சிதம்பரத்திற்கு திகார் சிறை : டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தால் கடந்த மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் சிபிஐ அவரை கைது செய்தது. 4 முறை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் கடந்த 5ம் தேதி 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் நேற்று பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார்மேத்தா வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு இந்த மாதம் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை மேலும் நீட்டிக்க வேண்டும். மேலும் அவருக்கு உடல்நிலை சரியான சூழலில் இல்லை என தெரிவிக்கின்றனர். குறிப்பாக ப.சிதம்பரத்தின் உடல்நிலையில் சிபிஐக்கும் அக்கறை உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் அவர்களது குற்றச்சாட்டை ஏற்கமுடியாது’’ என வாதிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்களது வாதத்தில், “விசாரணை கைதியாக இருக்கும் ஒருவருடைய நீதிமன்ற காவல் முடிந்துவிட்டால், மீண்டும் அவருக்கு நீதிமன்ற காவல் தான் வழங்க வேண்டும் என்று இல்லை. அவரை வெளியிலும் விடலாம். அதில் எந்த தவறும் இல்லை. இதில் சிபிஐ தரப்பில் இந்த மாதம் 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கான மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க கூடாது. குறிப்பாக இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவானது வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதனால் அடுத்த 4 நாட்கள் வரை வேண்டுமானால் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் கொடுங்கள். மேலும் அவரது வயது முதிர்வை கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், “ப.சிதம்பரத்திற்கு வரும் அக்டோபர் 3ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது. மேலும் அவர் வங்கி தொடர்பான ஆவணங்கள் மற்றும் நாடாளுமன்ற அனுமதி அட்டை புதுப்பித்தல் செய்ய ஆகியவற்றில் கையெழுத்திட எந்த தடையும் கிடையாது. மேலும் ப.சிதம்பரத்திற்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அவருக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது’’ என்றார். இதையடுத்து ப.சிதம்பரம் உடனடியாக போலீசாரால் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதில் எந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாற்காலி கூட இல்லை

திகார் சிறையில் முன்னதாக ப.சிதம்பரத்திற்கு நாற்காலி போடப்பட்டு இருந்தது. அதில் பகல் நேரத்தில் அவர் உட்கார அனுமதிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை தற்போது அது அங்கிருந்து திடீரென நீக்கப்பட்டு விட்டது. இதைத்தவிர சிறை அறையில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டிலில் படுப்பதற்கு ஒரு தலையணை கூட சிறை நிர்வாகம் தர மறுத்துவிட்டது. அதனால் ப.சிதம்பரத்தின் வயதை அடிப்படையாக கொண்டு மேற்கண்ட சலுகைகளை அவருக்கு வழங்க சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என நீதிபதி முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்பாட்டம்

இதில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்திய போதெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் அவரை பார்க்க வரவில்லை. இந்த நிலையில் நேற்று திகார் சிறையிள் இருந்து சிபிஐ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ப.சிதம்பரத்தை பார்க்க தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் எம்பி.விஷ்ணுபிரசாத் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருந்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தின் பின்பக்க வாயிலுக்கு சென்று ப.சிதம்பரத்தை விடுதலை செய் என்றும், பொய் வழக்கு போடாதே எனவும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்பத்தாருடன் பேச்சு

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என அவரது தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிபிஐ நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் வழக்கறிஞர் ஆகியோருடன் ப.சிதம்பரம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாகவும், முகமெல்லாம் கருத்தும் காணப்பட்டார்.

Related Stories: