மகாராஷ்டிராவில் பிரசாரத்தை தொடங்கி பிரதமர் பேச்சு புதிய சொர்க்கத்தை காஷ்மீரில் உருவாக்குவோம் : மீண்டும் பாஜ அரசுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை

நாசிக்: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜ பிரசாரத்தை, நாசிக்கில் நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ‘‘காஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்குவோம்’’ என்று கூறினார். மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், சட்டப்பேரவை தேர்தலையொட்டி மூன்றாவது கட்டமாக மேற்கொண்ட ‘மகா ஜனாதேஷ்’ யாத்திரை நேற்று நாசிக் நகரில் நிறைவுற்றது. இதையொட்டி இங்குள்ள தபோவன் மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்துக்கு பாஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜ பிரசாரத்தை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்பது இந்த நாட்டின் 130 கோடி மக்களின் விருப்பமாக இருந்தது. அதைத்தான் மத்திய அரசு செய்தது. நாட்டின் ஒற்றுமைக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பங்களும் கனவுகளும் நிறைவேறுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. ஜம்மு காஷ்மீரில் வன்முறையையும் தீவிரவாதத்தையும் தூண்டி விட எல்லைக்கு அப்பால் இருந்து தொடர்ந்து தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீரில் வாழும் இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகளின் நீண்டகால எண்ணமாக இருந்தது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என நாங்கள் வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். இனி நாம் ஒவ்வொரு காஷ்மீரியையும் கட்டித் தழுவுவோம். காஷ்மீரை புதிய சொர்க்க பூமியாக மாற்றுவோம்.

சில தலைவர்கள்(ராகுல் காந்தி) தெரிவிக்கும் கருத்துக்களை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் நாடுகளும் தீவிரவாத அமைப்புகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. காங்கிரசின் இந்த குழப்பநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சரத் பவாருக்கு என்ன ஆயிற்று?. அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஓட்டு வாங்குவதற்காக தவறான அறிக்கைகளை வெளியிடக் கூடாது.

மகாராஷ்டிராவில் பாஜ.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் மாநிலத்தில் நிலையான ஆட்சியை அளித்திருப்பதுடன் மகாராஷ்டிராவை முன்னேற்ற பாதையில் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். அதனால் பாஜ அரசுக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories: