புதிதாக அமைக்கப்பட உள்ள 4 தேசிய பேரிடர் மீட்பு படையில் அடுத்தாண்டு பெண்கள்

கொல்கத்தா: தேசிய பேரிடர் மீட்புப்படையின் புதிய படைப்பிரிவில் அடுத்த ஆண்டுக்குள் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்பதற்காகவும், நிவாரண உதவிகள் வழங்குவதற்காகவும் கடந்த 2006ம் ஆண்டு தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த படையில் பெண்களை சேர்ப்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்தது. அதன்படி, காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் டெல்லியில் உருவாக்கப்படும் புதிய படைப்பிரிவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஹரிங்கடாவில் உள்ள என்டிஆர்எப் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட படைப்பிரிவை, இந்த படையின் இயக்குனர் எஸ்என் பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறுகையில், ‘‘இதற்கு முன்பு பெண்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகள் எங்கள் படைப்பிரிவு முகாம்களில் இல்லை. இப்போது, இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. புதிதாக அமைக்கப்பட உள்ள 4 படைப்பிரிவுகளில் வீராங்கனைகளை சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சிறப்பு வேண்டுகோளை விடுத்திருந்தோம். தலா 1,150 வீரர்களை கொண்ட இந்த படைப்பிரிவில் அடுத்த ஆண்டுக்குள்  வீராங்கனைகள் சேர்க்கப்படுவார்கள்,’’ என்றார்.

Related Stories: