இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற இலங்கை கைதிகளை பிடிக்க 2 தனிப்படை : ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் மாஜிஸ்திரேட் விளக்கம் அளிக்க உத்தரவு

மதுரை: இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற இலங்கை கைதிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கை, கொழும்புவை சேர்ந்த சங்கசிரந்தா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உரிய ஆவணங்களின்றி வந்ததாகவும், இந்திய ஆதார் அட்டையை போலியாக தயாரித்ததாகவும் என்னை கைது செய்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதுவரை என்னை இலங்கைக்கு அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய - இலங்கை இடையேயான இருநாட்டு ஒப்பந்தப்படி, சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தில் என்னை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல், கொழும்பு கெனுமுல்ல முகாமைச் சேர்ந்த முகம்மது சப்ராஸ் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். ஏற்கனவே நடந்த விசாரணையின்போது, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டின், அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆகியோர் ஆஜராகி, ‘‘தப்பிச் சென்ற இருவரையும் பிடிக்க எஸ்பி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சங்கசிரந்தா என்பவர் ஒரு வழக்கு தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மற்றொருவர் அவருடன் சரணடைந்தாரா அவரது நிலை என்ன என்பது குறித்து இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். எனவே, 3 மாத கால அவகாசம் வேண்டும்’’ என்றனர்.

மனுதாரர் தரப்பில், இலங்கையில் வெளியான செய்தி குறித்த வீடியோவை செல்போனில் காட்டினர். இதை நீதிபதிகள் வாங்கிப் பார்த்தனர். பின்னர் நீதிபதிகள், ‘‘வேறு நாட்டைச் சேர்ந்த இருவர் சிறையில் இருந்து வெளியில் வந்து தப்பி சென்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை மிகவும் கவனக்குறைவாக கையாண்டுள்ளனர். இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, இருவரையும் சிறையில் இருந்து விடுவிக்கும் உத்தரவில், சென்னையில் உள்ள இலங்கைக்கான துணை தூதரகத்தில் இருவரையும் ஒப்படைக்க வேண்டுமென ஏன் குறிப்பிடவில்லை என்பது குறித்து, ராமநாதபுரம் ஜேஎம் 2 மாஜிஸ்திரேட் விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை அக். 3க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: