ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் முகிலன் ஆஜர் : அரசுக்கு எதிராக கோஷம்

மதுரை: ஜல்லிக்கட்டு வழக்கின் விசாரணைக்காக சமூக ஆர்வலர் முகிலன் நேற்று மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்தும், அனுமதி வழங்கக்கோரியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதேபோல், மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட புகார்களின் பேரில் சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட 64 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட் (பொ) பத்மநாபன் வழக்கின் விசாரணையை அக். 16க்கு தள்ளி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் முகிலன் அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி, ‘‘கால்நடை இனப்பெருக்க சட்டத்தை கொண்டு வந்து நாட்டு மாட்டின ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத  திட்டங்களை தமிழக அரசு தட்டி கேட்க மறுக்கிறது. கால்நடை இனப்பெருக்க சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: