தேனி, திண்டுக்கல் கேட்டவர்களுக்கு சென்னையில் மையம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுமைய ஒதுக்கீட்டில் குளறுபடி

கம்பம்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, விருப்ப தேர்வு மையம் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1க்கான கணினி வழித்தேர்வு வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் இத்தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்கள் பலர், தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்தபோது விருப்பத்தேர்வு மையம் 1ல் தேனியும், 2 மற்றும் 3ல் மதுரை மற்றும் திண்டுக்கல் என பதிவு செய்துள்ளனர். இத்தேர்விற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில் தேனி மாவட்டத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்ககளில் விருப்பத்தேர்வு மையம் பதிவு செய்த பலருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இம்மாவட்டங்களை தவிர்த்து திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட், அசல் அடையாள அட்டை மற்றும் போட்டோவுடன் தேர்வு நாளன்று காலை தேர்விற்கு காலை 7.30 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்கு முன்பாகவும் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஆனந்த் கூறுகையில், ‘‘தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்தபோது, விருப்பத்தேர்வு மையம் 1ல் தேனியும், 2 மற்றும் 3ல் மதுரை, திண்டுக்கல் என பதிவு செய்தேன்.

எனக்கு சம்பந்தமே இல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் காலை 7.30 மணிக்கு முன்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடியால் தேனி மாவட்டத்தில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்’’ என்றார்.

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, காந்திநகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் கண்ணன். காதிகிராப்ட் ஊழியர். இவரது மனைவி புஷ்பமாலா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 2வது குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புஷ்பமாலா வெளியூர் செல்லாமல் மகளை கவனித்து வருகிறார். எம்ஏ, பிட், எம்பில் படித்துள்ள புஷ்பமாலா, முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

முன்னுரிமையில் முதலிடமாக திண்டுக்கல்லையும், 2வதாக தேனியையும், மூன்றாவது மதுரையையும் கேட்டிருந்தார். ஆனால் ஹால்டிக்கெட்டில் இவருக்கு 400 கிமீ தூரத்தில் உள்ள சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆட்டிசம் பாதித்த குழந்தையை விட்டு வெளியூர் செல்ல முடியாத நிலையில், தேர்வு எழுதும் எண்ணத்தையே புஷ்பமாலா கைவிட்டுள்ளார். இதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசு இடம் ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: