அங்கன்வாடி மைய அமைப்பாளருடன் தகாத உறவு புகார் போக்சோவில் சிக்கிய ஆசிரியருக்கு புதிய பள்ளியில் பணியாற்ற எதிர்ப்பு

சேந்தமங்கலம்: போக்சோ வழக்கில் சிக்கிய இடைநிலை ஆசிரியர், இடமாற்றம் செய்யப்பட்ட புதிய பள்ளியில் பணியாற்ற, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள எஸ்.உடுப்பம் ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சரவணன்(34). பள்ளி  வளாகத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய அமைப்பாளருக்கும், ஆசிரியர் சரவணனுக்கும் இடையே தகாத உறவு  இருந்ததாக புகார் கூறப்பட்டது. இருவரும் பள்ளி வளாகத்திலேயே நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மக்களின் அஞ்சலக பணத்தை, முறையாக  அவர்களது கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்த அப்பெண் அமைப்பாளர், திடீரென தலைமறைவானார்.  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் சரவணனை  சரமாரியாக தாக்கினர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், தாக்குதலில்  ஈடுபட்ட 10 பேர் மீது புதுச்சத்திரம் போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு  செய்து, அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, பள்ளியில் படிக்கும்  மாணவிகளின் பெற்றோர்  கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியர் சரவணன் மீது  போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த  ஆசிரியர் சரவணன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்  உதயகுமார், ஆசிரியர் சரவணனை எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சியில் உள்ள  குட்டமூப்பன்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.  அந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 3 மாணவிகள் மட்டுமே உள்ளனர். இதனிடையே,  ஆசிரியர் சரவணன் அந்த பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தகவலை அறிந்த  குட்டமூப்பன்பட்டி பொதுமக்கள், நேற்று பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.  அப்போது, ஆசிரியர் சரவணன் இங்கு பணியாற்றினால், தங்களது பிள்ளைகளை  பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும், நேற்று தங்கள்  பிள்ளைகளை பள்ளிக்கு  அனுப்பவில்லை. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: