×

விமான நிலைய கூரையிலிருந்து அருவி போல் கொட்டிய நீர் : திமுக எம்பி கனிமொழி, பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையம் மற்றும் சர்வதேச முனையங்கள் 2100 கோடி செலவில் கண்ணாடி மாளிகை போல் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் திறப்பு விழா நடந்தது. இதையடுத்து அதே ஆண்டில் மே மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக உள்நாட்டு முனையத்திலும் சர்வதேச முனையத்திலும் மாறி, மாறி விபத்துக்கள் நடந்தன. விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரைகள் உடைந்து நொறுங்குவது, 7 அடி உயரம் உடைய கண்ணாடி கதவுகள் உடைந்து நொறுங்குவது, சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள 8 அடி உயரம் உள்ள கண்ணாடிகள் பெயர்ந்து விழுவது, அலங்கார வேலைப்பாடுகள் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுவது என இதுவரையில் 89 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மிதமான மழைக்கே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதியின் மேற்கூரையில் இருந்து மழை நீர்  சவரில் கொட்டும் தண்ணீர் போல் விமான நிலையத்தின் உள்பகுதியில் கொட்டியது. குறிப்பாக பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்தில் இதை போல் தண்ணீர் அருவி போல் கொட்டியது. விமான நிலையத்தில் அவசர, அவசரமாக பிளாஸ்டிக் டப்புகளை வைத்து மழை நீரை பிடித்து விமான நிலைய கழிவறையில் கொட்டினர்.

இதை பார்த்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கண்ணாடி மேற்கூரை உடைவது இருந்தது. இப்போது இந்த மிதமான மழைக்கே மழை நீர் உள்ளே கொட்டுகிறதே, வருகின்ற, நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன மழையின் போது விமான நிலையம் என்ன ஆகுமோ என்று பீதி அடைந்தனர். இந்த நேரத்தில் காலை 5 மணி விமானத்தில் டெல்லி செல்வதற்காக திமுக எம்பி கனிமொழி அங்கு வந்தார். அவர் அந்த காட்சியை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். புதியதாக கட்டிய விமான நிலையத்தில் ஏன் இந்த நிலை என அங்குள்ள அதிகாரிகளை கேட்ட போது, அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து கனிமொழி, தன்னுடைய செல்போனில் இந்த காட்சிகளை படம் பிடித்தார்.  பின்பு நேற்று பிற்பகலில் தன்னுடைய டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில், முன்பு சென்னை விமான நிலையத்தில் பால்சீலிங் தான் உடைந்து விழுந்தது. ஆனால் தற்போது விமான நிலையத்திற்குள் ஷவரில் தண்ணீர் கொட்டுகிறது என்று பதிவிட்டு தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய இயக்குநர் எஸ். குமாரை கேட்டதற்கு அவர் அளித்த பதில், ‘’சென்னை விமான நிலையத்தின் மேல் தளத்தில் கான்கிரீட் தளம் போடவில்லை. மெட்டல் சீட்டுகள் போட்டுதான் மூடியுள்ளோம். அதில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இது போல் நீர் கசிந்துள்ளது. அதுவும் நேற்று இரவில் இருந்து தான் கசிந்துள்ளது. இது என்னுடைய கவனத்திற்கு வந்தது. உடனடியாக எத்தனை இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டு பிடித்து ஆய்வு செய்ய கூறியிருக்கிறேன். அடுத்த ஓரிரு தினங்களில் அந்த உடைப்பை சரி செய்து விடுவோம். யாரும் மழை காலத்தை கண்டு அச்சப்படத் தேவையில்லை’’ என்று கூறினார். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : airport ,DMK ,passengers , Water pouring, roof of the airport:
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...