காஞ்சி மடத்திற்கு சொந்தமான 3 யானைகளை மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளை தனியார் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு, திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகளை முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறியும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியும், பவுண்டேஷன் இந்தியா என்ற அமைப்பும், வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை என்ற அமைப்பும் கடந்த 2016ம் ஆண்டு அந்த யானைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.தற்போது, விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதி இல்லாமல் சட்டவிரோத யானைகள் முகாமை அந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது.   யானைகளை காட்டி வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடையை அறக்கட்டளை பெற்று வருகிறது. யானைகள் உடல்நிலை சரியில்லாத நிலையில் தற்போது உள்ளன. எனவே, இந்த முகாமை மூடுமாறும் அந்த யானைகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘யானைகள் மிகவும் உணர்வுபூர்வமான விலங்குகள். அவைகளுக்கு துன்பம் தரக்கூடாது. எனவே, தனியார் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 யானைகளையும் 4 வாரங்களில் மீட்டு அவைகளை திருச்சி எம்ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் அரசு சேர்க்க வேண்டும். இந்த மையத்தில், இந்த 3 யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். யானைகளை இடமாற்றம் செய்தது, அவற்றை பராமரிப்பது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: