தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க ஆணையம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், மரங்களை பாதுகாப்பதற்கும்   மரங்கள் சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்  நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த யோசனை வரவேற்கத்தக்கது.அதன்படி, மரங்களை பாதுகாப்பதற்காக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. மரங்கள் ஆணையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை  தமிழக  சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும்.  

புதிதாக மரங்கள் நடப்படுவதையும் ஆணையம் கண்காணிக்கும். இதன்மூலம் மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், தமிழகத்தின் பசுமைப்பரப்பும் விரிவுபடுத்தப்படும். மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் மரங்கள்  ஆணையம் மிகப்பெரிய கவசமாக திகழும். மரங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் சட்டத்தை விரைந்து  நிறைவேற்றுவதுடன், அதை செயல்படுத்த மரங்கள்  ஆணையத்தையும் தமிழக அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: