ஐஐடியில் நாளை ரோபோடிக் தொழில்நுட்ப கண்காட்சி: பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

சென்னை: சென்னை ஐஐடியின் இன்ஜினியரிங் டிசைன் துறை சார்பில் நாளை அடுத்த தலைமுறை இயந்திரங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.சென்னை ஐஐடியில் கடந்த 5ம் தேதி ‘இன்ஸ்டியூட் ஆப் எமினென்ஸ்’ அந்தஸ்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வழங்கியது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை ஐஐடிக்கு ₹1,000 கோடி ஆராய்ச்சி பணிகளுக்காக வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் முதல் 300 இடங்களுக்குள் இந்தியாவில் இருந்து எந்த கல்வி நிறுவனமும் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த சிறப்பு அந்தஸ்து, நிதியுதவி மூலம் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடி உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.சென்னை ஐஐடியில் அடுத்த தலைமுறை இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில் துறையினர் முன் உள்ள சவால்களை எதிர்கொண்டு அதை போக்குவதற்கான ஆலோசனைகள் வழங்குவது, புதிய இயந்திரங்களை உருவாக்குவதற்கு 2006ம்  ஆண்டு இன்ஜினியரிங் டிசைன் என்ற துறை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அடுத்த தலைமுறை இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், ஐஐடியில் நாளை (செப்டம்பர் 21ம் தேதி) ஓபன் ஹவுஸ் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இலவசமாக காணலாம்.

ஆட்டோமேட்டிவ் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல் டிசைன், மெட்டியரியல்ஸ், டிசைன் அன்ட் மேனுபேக்சரிங், ரோபோடிக் அன்ட் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின்  ஆராய்ச்சி திட்ட மாதிரிகள் தொடர்பாக ஸ்டால்கள் அமைத்து விளக்கம் அளிக்கப்படுகிறது. சென்னை ஐஐடியின் ஆய்வகங்களை பொது மக்கள் பார்வையிடலாம். இதுதவிர தொழில்துறையினருடனும், ஆராய்ச்சி மாணவர்களுடனும் கலந்துரையாடலாம். இதுதவிர சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்படும். அவர்கள் உருவாக்கிய பொருட்களும் காட்சிப்படுத்தப்படும். ஓப்பன் ஹவுஸ் நிகழ்ச்சியில் இலவசமாக கலந்துகொள்ள பொதுமக்கள் https://ed.iitm.ac.in/~openhouse/ என்ற  இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: