×

முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைப்பு: தமிழக அரசு புதிய முயற்சி

சென்னை: முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்  மாநாடு கடந்த 2015 செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 9 நாடுகள், 23 பங்குதாரர் நிறுவனங்கள்  பங்குபெற்றன. இதில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த  மாநாட்டின் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அரசு அறிவித்தது. இதில், தொழில் துறையில் ரூ.1.04 லட்சம் கோடியும், மின்சார உற்பத்தி துறையில் ரூ.1.07 லட்சம்  கோடி முதலீடும், தகவல் தொழில் நுட்பத்துறையில் 10,950 கோடியும், கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1,900 கோடி முதலீடும்,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையில் ரூ.500 கோடியும், விவசாயத்துறையில் ரூ.800  கோடியும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் ரூ.16,532 கோடியும் முதலீ‌டு செய்வதற்க்கு உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அரசு முறைப்படி அறிவித்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரியில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ஜப்பான், கொரியா, பிரான்ஸ், தைவான், ஜெர்மனி, பின்லாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்து  கொண்டன. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வரும் போது 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய  நாடுகளுக்குச் சென்று ரூ.8,835 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு இதுவரை  நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு நிதி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டன. எவ்வளவு  பேருக்கு வேலை கிடைத்தது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2015ல் நடந்த உலக  முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதில், ரூ.62 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 22 நிறுவனங்கள் மட்டுமே சோதனை அல்லது  உற்பத்தியை தொடங்கியுள்ளன என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டின் தொழில் வளத்தை பெருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 10 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெளிநாட்டு பயணம் குறித்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில்  தொழில் தொடங்குவதற்கு ஒற்றைச்சாலர முறையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்கா, துபாய், லண்டன் ஆகிய 3 நாடுகளின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தன் மூலம் ரூ.8,835  கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் 35,520 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவித்த முதல்வர், உலக புகழ் பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை விரைவில் தமிழகத்தில் நிறுவப்படும் என்றும் அதன் மூலம் உலக  தரத்திலான சிகிச்சைகள் பொதுமக்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்நிலையில் அடுத்தக்கட்டமாக நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள விரைவில் இஸ்ரேல் நாட்டுக்கு பயணம்  மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இஸ்ரேல் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதன் மூலம் வறட்சி காலங்களில் நீரைச் சிக்கனமாக பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகள் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிப்பது  போல தமிழகத்திலும் சிறந்த சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த பயணம் வெளிநாட்டு முதலீடுகளை ஏற்க உதவியதோடு, முதலீட்டாளர்கள் இடையே தமிழ்நாட்டின் மீது ஒரு பெரும்  நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை முதன்மைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார். ஒரு மாதத்திற்கு  மேலாக நிலுவையில் உள்ள அனுமதிகளுக்கு இக்குழு தீர்வு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் முதலீட்டாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி நிலையில் சிறப்பு அலுவலரை கொண்டு  முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.



Tags : CM Palanisamy ,High Commission ,Tamilnadu Government , High Commission headed by Chief Minister Palanisamy to boost investments
× RELATED சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன...