நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்!...மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அளித்த புகார்  மீது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவைத் தேடி தேனியிலிருந்து சென்னை வந்த தனிப்படை, தனது விசாரணையை நடத்தி வருகிறது.  உதித் சூர்யா வீட்டில் யாரும் இல்லாததால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

அரசு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பயிற்சி மையம் மூலமாக நீட் தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா? எனவும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் 4 பேர் நீட் தேர்வில்  ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு  தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 23 மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்று கூறியுள்ளார்.  

இந்நிலையில், +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் நீட் கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?, மத்திய அரசின் மாணவர்  விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்! என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: