மண் சட்டியில் திருமண விருந்துண்ட மணமக்கள்: நண்பர்கள் ருசிகர ஏற்பாடு

களியக்காவிளை: திருவட்டார் அருகே கல்லாம்பொற்றை பகுதியை சேர்ந்தவர் சுஜின். இவருக்கும், புலிப்பனம்  பகுதியை சேர்ந்த அனிஷா என்பவருக்கும் மணமகள்  ஊரான புலிப்பனத்தில் திருமணம் நடந்தது. தொடர்ந்து மதியம் தடபுடலான விருந்துக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள்,  சுற்றத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருந்துக்கு இடையே  மணமகன் மற்றும் மணமகளுக்கு நண்பர்கள் அறுசுவை விருந்து பரிமாறினர். வழக்கமாக ஒரே இலையில் தம்பதியினர் சாப்பிடுவர். அல்லது மணமகன் உணவு ஊட்ட, மணமகள் சாப்பிடுவார். ஆனால் இந்த திருமண விருந்தில் வித்யாசமாக மணமக்களுக்கு மண் சட்டிகளில் வைத்து பலவகையான சுவைமிகு உணவுகள்  பரிமாறப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் செய்து இருந்தனர். இது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் புருவத்தை  உயர்த்த வைத்தது. மேலும் பலரும் இந்த நிகழ்வை பாராட்டினர்.

இது  குறித்து நண்பர்கள் கூறுகையில், ‘மனிதன் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கை  முறைப்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். மண் பாண்டங்கள் நமது  பாரம்பரியத்தில் வந்தது. இன்று பிளாஸ்டிக், உலோகம் உட்பட பல வடிவில்  பாத்திரங்கள் வந்தாலும் மண் பானை சமையல் மீண்டும் திரும்ப தொடங்கி உள்ளது.  இதை நினைவு படுத்தவே நாங்கள் மணமக்களுக்கு மண் சட்டிகளில் உணவு பரிமாறினோம்’  என்றனர்.கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திற்பரப்பு பகுதியில் ஒரு  மணமகன் மாட்டு வண்டியில் திருமணத்துக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டது.  இந்த நிலையில் தற்போது மணமக்களுக்கு மண்சட்டிகளில் உணவு பரிமாறப்பட்டது பரபரப்பாக  பேசப்படுகிறது.

Related Stories: