×

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஜீப்பில் செல்லும் தோட்ட தொழிலாளர்கள்

தேனி: தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்ல போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் ஜீப்பில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவையான அளவு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் குமுளியில் இருந்து போடி வரை கேரள-தமிழக மாநில எல்லைகள் சந்திக்கின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்ல குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய மூன்று பாதைகள் உள்ளன. இதில் குமுளி வழியாக செல்ல மட்டுமே போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போடிமெட்டு, கம்பம்மெட்டு வழியாக செல்ல ஓரிரு பஸ்கள் அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் எல்லையோரம் உள்ள தேயிலை, காபி, ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தேனி மாவட்ட தொழிலாளர்கள், வேறு வழியின்றி கேரள தோட்ட முதலாளிகள் ஏற்பாடு செய்யும் ஜீப்களில் பயணிக்கின்றனர்.

இந்த ஜீப்களில் அதிகபட்சம் 8 பேர் முதல் 10 பேர் வரை மட்டுமே செல்ல முடியும். ஆனால் ஒரு ஜீப்பில் சராசரியாக 25 தொழிலாளர்கள் நெருக்கி அமர்ந்து பயணிக்கின்றனர். இதனால் டிரைவரால் முறையாக ஜீப்களை இயக்க முடிவதில்லை. ஓவர்லோடு லோடு காரணமாக ஜீப்புகளும் கட்டுப்பாட்டை இழக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரை இழக்கின்றனர். கை, கால்களை இழக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் கை, கால்களை இழந்தனர். போலீசார் என்ன தான் கட்டுப்பாடுகளை விதித்தாலும், சோதனை நடத்தினாலும் முழுமையாக இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்களின் உயிரிழப்பை பொருட்படுத்துவதும் இல்லை. தொழிலாளர்களின் குடும்பங்கள் தவிப்பதையும் கண்டுகொள்ளவில்லை. போக்குவரத்துக்கழகம் ஒரு சேவைத்துறை தான். ஆனால் தனியார் பஸ்களுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்காக குறிப்பிட்ட  நேரங்களில், குறிப்பிட்ட வழத்தடங்களில் பஸ்களை இயக்குவதில்லை. இதனை யாரும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதும் இல்லை. போடி மெட்டு, கம்பம் மெட்டு வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான ஜீப்களில் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து பயணிக்கின்றனர். அரசு பஸ்களை இயக்கினால், இவர்கள் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. இதனை கருத்தில் கொண்டு, அரசு கம்பம் மெட்டு, போடி மெட்டு வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.


Tags : Plantation workers ,Kerala ,Theni district , Theni, Kerala, Bus facilities
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்